இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்க முயற்சி

75

 

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தற்காலிக திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனை அடுத்து ஓகஸ்ட் மாதத்தில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தபோதும் இந்த நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னர் அறிவித்திருந்தார்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கியபோதும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் நாட்டிற்குள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சுற்றுலாபயணிகளுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகிறது, ஆனால் அதற்கான திகதி இன்னும் முடிவு செய்யயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.