இங்கிலாந்து ராணி எலிசபெத், பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ (வயது 59). இவர் இளவரசர் சார்லஸ்சின் தம்பியும் ஆவார்.

இவர் சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து, 1996-ம் ஆண்டு பிரிந்து, விவாகரத்து செய்து விட்டார்.

அமெரிக்க பைனான்சியரும், நியூயார்க் சிறையில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவருமான ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் வெர்ஜினியா கியுப்ரே (35). இவர் ராபர்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த பெண், அமெரிக்க டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இவர் 2001-ம் ஆண்டு, தான் 17 வயது பருவப்பெண்ணாக இருந்தபோது இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெப்ரி எப்ஸ்டீனின் தோழியான ஜிஸ்லைனே மேக்ஸ்வெல் என்னை பணிக்கு அமர்த்தினார். இந்த மேக்ஸ்வெல், இங்கிலாந்து பத்திரிகை அதிபர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள்.

நான் 2001-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தேன். அங்கு கிளப் டிரேம்ப் என்ற இல்லத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கே இளவரசர் ஆண்ட்ரூவை சந்தித்தேன். அவர் எனக்கு மது கொடுத்தார்.

அப்போது அங்கு ஜிஸ்லைனே மேக்ஸ்வெல்லும் உடன் இருந்தார்.

இளவரசர் ஆண்ட்ரூ என்னை அவர்களுடன் நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டார் ஆடினேன். பின்னர் நான் ஜிஸ்லைனேவுடன் அவரது வீட்டுக்கு வந்து விட்டேன்.

வீட்டில் வைத்து ஜிஸ்லைனே, “அவர் (இளவரசர் ஆண்ட்ரூ) நமது வீட்டுக்கு வருகிறார். நீ ஜெப்ரி எப்ஸ்டீனுடன் என்ன செய்தாயோ அதை அவருடனும் செய்ய வேண்டும்” என்றார்.

அதன்பின்னர் ஆண்ட்ரூ அங்கு வந்தார். அவர் குளியலறையில் வைத்து என்னிடம் பாலியல் ரீதியில் அணுகினார். பின்னர் என்னை படுக்கை அறைக்கு அவர் அழைத்துச்சென்று செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்.

அதே நேரம் அவர் என்னுடன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. அவர் நன்றி சொன்னார். மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டு அவர் சென்று விட்டார். என்னால் அதை நம்பவே முடியவில்லை.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அவர் மறுக்கிறார். அவர் தொடர்ந்து மறுக்கத்தான் செய்வார். ஆனால் அவருக்கு உண்மை தெரியும். எனக்கும் உண்மை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த குற்றச்சாட்டுகளை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்துள்ளார். வெர்ஜினியா கியுப்ரேவுக்கும் எனக்கும் எந்தவிதமான செக்ஸ் உறவும் இருந்தது கிடையாது என அவர் கூறி உள்ளார்.

அவரது சார்பில் பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள மறுப்பு செய்தியில், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று சொல்லப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here