தேனி மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் சேர்ந்த மாணவர்களில் சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை திருப்பதியில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆள் மாறாட்டம் விவகாரத்தில் அவருடன் வேறு யார்-யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்து இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த போது பயன்படுத்திய புகைப்படத்துடன் தற்போது சேர்ந்து இருப்பவரின் புகைப்படம் சரியாக இருக்கிறதா? என்பது போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கோவை பி.எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது. அப்போது ஒரு மாணவர், ஒரு மாணவியின் புகைப்படம் வித்தியாசமாக இருப்பது தெரிய வந்தது.

நுழைவு தேர்வு அனுமதி சீட்டில் இருந்த புகைப்படத்துக்கும், கல்லூரி இட ஒதுக்கீட்டு அனுமதி கடிதத்தில் இருந்த புகைப்படத்திற்கும் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவர் மற்றும் மாணவி பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முறைகேடு புகாருக்கு உள்ளாகி இருக்கும் மாணவர் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர். அவர் சி.பி.எஸ். இ.யில் படித்து இந்த ஆண்டு நீட் தேர்வினை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் எழுதினார்.

அவர் நீட் தேர்வில் 351 மதிப்பெண்கள் பெற்றார். அதன் பிறகு நடந்த கலந்தாய்வில் முதலில் காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரியை அவர் தேர்வு செய்தார். ஆனால் பின்னர் அவர் சிறப்பு கலந்தாய்வில் கோவை பி.எஸ்.ஜி. தனியார் மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெற்றார்.

இதனை தொடர்ந்து அந்த மாணவர் பி.எஸ்.ஜி. கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

இதே போன்று புகாருக்குள்ளாகி இருக்கும் மாணவி தர்மபுரி மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரும் சி.பி.எஸ்.இ.யில் படித்து இந்த ஆண்டு நீட் தேர்வை சேலத்தில் உள்ள நாலேஜ் தொழில் நுட்ப கல்லூரியில் எழுதினார்.

அதில் அவர் 437 மதிப்பெண்கள் பெற்று தேர்வானார். கலந்தாய்வு நடந்த போது கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். அந்த கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.

மாணவர்-மாணவியின் சான்றிதழ்களை சரி பார்த்த போது தான் புகைப்படத்தில் மாறுபாடு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கும், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபுவுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் பேரில் மருத்துவக் கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறியதாவது:-

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்து உள்ள மாணவர், மாணவியின் சான்றிதழ்களை மீண்டும் சரி பார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது. நுழைவு அனுமதி சீட்டில் உள்ள புகைப்படத்தையும், கல்லூரி இட ஒதுக்கீடு அனுமதி கடிதத்தில் உள்ள புகைப்படத்தையும் சரி பார்க்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தேர்வு குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

மாணவர்களின் சேர்க்கையை கல்லூரிகள்தான் மேற்கொண்டு வருகின்றன. நாங்கள் முதலாம் ஆண்டு மருவத்துவக் கல்லூரி மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரி பார்த்தோம்.

அவர்களது இருப்பிட சான்றிதழ்களையும் துல்லியமாக ஆய்வு செய்தோம். அவர்களது சமுதாய பின்புலமும் சோதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் மூலம் ஆய்வு செய்யப்படாதது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மாணவனும், மாணவியும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்களது கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here