கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர் விளைவுகள் ஏற்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதுடன், தமிழர் சமூக வாழ்வின் பழக்க வழக்கம் உள்ளிட்ட பண்பாட்டு மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பா.ஜ.க., மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வு அமைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மதவாத சக்திகளைப் பணியில் அமர்த்தி வருகிறது.

இந்துத்துவக் கருத்தியலின் ‘இந்துராஷ்டிரா’வை கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் நீதித் துறையில் தலையீடு செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியாற்ற வழிவகுக்கும் நீதிபதிகள் பணித் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர்விளைவுகள் ஏற்படும். நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன முறையினையும், கட்டமைப்பையும் சீர்குலைக்கும், பா.ஜ.க. மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் சட்டம் பயின்றுள்ள, பயின்று வரும் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதுடன், சாமானிய மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை, தமிழர் சமூக வாழ்வின் பழக்க வழக்கம் உள்ளிட்ட பண்பாட்டு மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here