ஒருநாள் கிரிக்கெட்டின் முதல்நிலை பந்து வீச்சாளரான இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, தனக்கு சிறுகுழந்தை போன்றவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சு பாணி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அதனால், பும்ரா எனக்கு வெறும் சிறு குழந்தை மாதிரி. நான் எளிதில் ஆதிக்கம் செலுத்தி, அவருடைய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வேன்.

எனது காலத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதால் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் எனக்கு சிரமம் இருக்காது. அவருக்குதான் நெருக்கடி இருக்கும்.

எனினும், பும்ரா சிறப்பாக செயற்படுகிறார். நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவருடைய பந்துவீச்சு பாணி சற்று இயல்புக்கு மாறான முறையில் இருக்கிறது. அவர் பந்தை மிகச் சரியாக கையாளுகிறார். அதனால்தான் அவர் திறம்பட இருக்கிறார்.

அவர் விசித்திரமான பந்துவீச்சை கொண்டுள்ளார். பந்தின் தையல் பகுதியை சரியாக கீழே அடிக்கிறார். அதனால் தான் அவரது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது’ என கூறினார்.

அப்துல் ரசாக் இது போல சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவது புதிதல்ல. இதற்கு முன்னதாக உலகக் கிண்ண தொடரின் போது ஹர்திக் பண்டியாவிடம் குறை உள்ளது. அவருக்கு பயிற்சி அளிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, வாய்ப்பு கொடுத்தால் அவரை உலகின் சிறந்த சகலதுறை வீரராக மாற்றிக் காட்டுவேன்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்பரிட் பும்ரா, தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் 5ஆவது இடத்திலும் உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான அப்துல் ரசாக், 46 டெஸ்ட் போட்டிகள், 265 ஒருநாள் மற்றும் 32 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here