அரிசி அடை 

தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – அரை கிண்ணம், பச்சரிசி – முக்கால் கிண்ணம், தேங்காய்ப்பால் – ஒரு டம்ளர், தேங்காய்த் துருவல் – ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகு – 2 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு, அரிசியைக் களைந்து மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து அடை தட்டி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும். எல்லா சட்னிக்கும் ஏற்ற அடை இது.

கார அடை 

தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 4 பல் (தோல் உரித்தது), மிளகு – 2 தேக்கரண்டி, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு – ஒரு கிண்ணம், முளைகட்டிய கொண்டைக்கடலை – ஒரு கிண்ணம், கறிவேப்பிலை நறுக்கியது – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்துக் கொரகொரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலையுடன் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மாவை நன்கு கலக்கவும். கல் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து அடை தட்டி, இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். காரமும் மணமும் நிறைந்த இந்த கார அடை ருசியாக இருக்கும். தொட்டுக்கொள்ள வெண்ணெய், வெல்லம் இருந்தால் போதும்.

அறுகீரை அடை

தேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கிண்ணம், பாசிப்பருப்பு – கால் கிண்ணம், பொடியாக நறுக்கிய முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை – தலா ஒரு கிண்ணம். காம்பு ஆய்ந்த வல்லாரை – ஒரு கைப்பிடி, பொடியாக நறுக்கிய அகத்திக்கீரை – ஒரு கைப்பிடி, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு, மிளகு – ஒரு தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து வடிக்கட்டி இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அடை மாவுப் பதத்துக்கு அரைக்கவும். நறுக்கி வைத்துள்ள எல்லா கீரைகளையும் அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு கலந்து, கல் காய்ந்ததும், அடை தட்டி மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தும் செய்யலாம். தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

தக்காளி அடை 

தேவையானவை: பழுத்தத் தக்காளி – 4 முதல் 5, புழுங்கல் அரிசி – ஒன்றரை கிண்ணம், இஞ்சி – 1 துண்டு, காய்ந்த மிளகாய் – மூன்று, மிளகு – 2 தேக்கரண்டி, பூண்டு – 4 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து அரைக்கவும். சிறிது அரைபட்டதும் தக்காளியை நறுக்கிப் போட்டு அரைக்கவும். இந்த மாவில் உப்பு சேர்த்து கலந்து, கல் காய்ந்ததும், அடைக்கு ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். தக்காளியின் புளிப்பும் லேசான இனிப்பும் இஞ்சி, பூண்டு, மிளகு வாசனையும் கலந்து கட்டி ருசிக்க வைக்கும். இதற்கு, தேங்காய் சட்னி ஏற்ற சைட் டிஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here