சிறந்த வீரர்களில் ஒருவர் குசல் மெண்டிஸ் _ மிக்கி ஆர்தர்

தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சிறந்த வீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸ் திகழ்வதாக அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் இளம் வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சிறந்த வீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸைக் கூறலாம். அவரது திறமையில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது. மிகவும் உயர்ந்த அளவில் உள்ளது. அவருக்கு எந்தவொரு நெருக்கடியும் இன்றி அனைத்து பகுதிகளிலும் ஓட்டங்களைக் குவிப்பதற்கான திறமை உண்டு என நான் நினைக்கிறேன்.

அதேபோல, அவருடைய துடுப்பாட்ட முறையானது மிகவும் வித்தியாசமானதாகவும், உறுதியானதாகவும் காணப்படுகின்றது. அவருடைய கடந்த கால அடைவுமட்டங்களை எடுத்துப்பார்க்கும் போது அவரது திறமைகளை இப்போதே கணிக்க முடியாது.

எந்தவொரு வீரருக்கும் சிறந்த காலங்களைப் போல மோசமான காலங்களையும் முகங்கொடுக்க வேண்டிவரும். இது உலகத்தில் உள்ள பொதுவானதொரு நியதியாக உள்ளது. எனவே, குசல் மெண்டிஸ் குறித்து எமது துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேன்ட் ப்ளெவர் விசேட அவதானம் செலுத்தி வருகின்றார்” என கூறினார்.

25 வயதான குசல் மெண்டிஸ், இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் 2995 ஓட்டங்களையும், 76 ஒருநாள் போட்டிகளில் 2167 ஓட்டங்களையும், 26 ரி-20 போட்டிகளில் 484 ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.