அதிக போட்டிகளில் விளையாட முடியாததற்கு அப்ரிடியே காரணம்_ டேனிஷ் கனேரியா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாததற்கு அப்போதைய அணித்தலைவராக இருந்த சயீட் அப்ரிடியே காரணம் என அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தி தாள்யொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நானும், அப்ரிடியும் ஒரே துறை அணிக்காக உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும், ஒருநாள் போட்டியில் விளையாடிய போது அவர் எப்பொழுதும் எனக்கு எதிராகவே நடந்து கொண்டார். எனக்கு பாகிஸ்தானுக்காக அதிக ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை. அதற்கு காரணம் அப்ரிடி தான். உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் தலைவராக இருக்கையில் என்னிடம் நியாயமாக நடந்து கொண்டதில்லை.

எந்தவித காரணமும் இல்லாமல் என்னை அணியில் விளையாடவிடாமல் வெளியில் உட்கார வைப்பார். மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர் எனக்கு ஒருபோதும் ஆதரவு அளித்தது கிடையாது. அவர் என்னை இப்படி நடத்தியதற்கு காரணம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அதையும் மீறி நான் பாகிஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்’ என கூறினார்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய 39 வயதான டேனிஷ் கனேரியா, 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் கவுண்டி போட்டியில் டர்ஹமிற்கு எதிராக எசெக்ஸ் அணிக்காக கனேரியா விளையாடிய போது மெர்வின் வெஸ்ட்ஃபீல்டுடன் சூதாட்டத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.