ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

உலகக்கோப்பை தொடர் தள்ளிப்போகும் பட்சத்தில் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் தவித்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச அளவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அனைத்து எல்லைகளையும் 6 மாதத்துக்கு மூடப்பட்டுள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்காலம் குறித்து ஐசிசி வரும் மே 28 ஆம் திகதி நடக்கவுள்ள கூட்டத்தில் முடிவு எடுக்கவுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச விளையாட்டு உலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும் விட்டுவைக்காது என தெரிகிறது. அந்த ஐசிசி கூட்டத்தில் டி-20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது, பந்தில் எச்சில் பயன்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் தள்ளிப்போகும் பட்சத்தில் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், என்னைப் பொறுத்தவரையில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு நடப்பது சந்தேகம் தான். இந்நிலையில் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட் போட்டிகள் துவங்க இன்னும் 2 முதல் 4 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார்.