இலங்கை அணியுடனான தொடரை நடத்துவது குறித்து தீர்மானிக்கவில்லை _ பங்களாதேஷ்

இலங்கை கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கபடவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள், எதிர்வரும் ஜூலை மாதம் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இத்தொடர் நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் கூறுகையில், ‘இன்று பாதுகாப்பாக இருக்கும் இடம் நாளை பாதுகாப்பாக இருக்குமா? என்பது பற்றித் தெரியாது. ஏனெனில், வைரஸ் தாக்கம் மீண்டும் வருகின்றது. எனவே, யாரும் இது எப்போது முடியும் என்பதையோ அல்லது எப்படியான சூழ்நிலை உருவாகும் என்பதையோ கணிக்க முடியாது.

இலங்கை கிரிக்கெட் அணி தொடரை சொந்த நாட்டில் நடத்துவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதனை இப்போது அவர்களது விருப்பத்தை வைத்து மாத்திரம் தீர்மானிக்க முடியாது. நாங்கள் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கின்றது. அதில், வீரர்கள் எப்படிப் பயணிப்பார்கள், அவர்கள் எங்கே தங்கவைக்கப்படவுள்ளனர், எங்களுக்கு அவர்களை அனுப்ப அனுமதி கிடைக்குமா? அல்லது இல்லையா? என பல கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டியிருக்கின்றது.

நாங்கள் ஜூலையிலா அல்லது ஒகஸ்டிலா? என கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் விளையாட ஆரம்பிக்கும் திகதியினை என்னால் வழங்க முடியாது. நாங்கள் ஐ.சி.சி. என்ன செய்கின்றது, ஆசிய கிரிக்கெட் சபை என்ன செய்கின்றது? மற்ற நாடுகள் என்ன செய்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரையில் எந்த நாடும் கிரிக்கெட் போட்டிகளை மீள விளையாடும் திகதிகள் குறித்து அறிவிக்கவில்லை. நாங்கள் விளையாடுவதற்கான திகதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்படுவது தவறான யோசனையாகும்’ என கூறினார்.