உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது…!

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் தெற்கு பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜார் முகாமில் கடந்த 14ஆம் திகதி முதல் முறையாக இருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த முகாமில் ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடியான சூழ்நிலையிலும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் வாழ்ந்து வரும் நிலையில், வைரஸ் தொற்று பரவியமை அங்கு பலரினதும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒரு பெரிய தொற்று பரவலைக் காணவில்லை. இருப்பினும், கடந்த வாரத்தில், கொரோனா வைரஸுடன் ஐந்து உறுதிப்படுத்தப்பட்ட அகதிகள் தொற்றுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட ரோஹிங்கியர்கள் நன்றாக இருக்கிறார்கள். வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் நிச்சயமாக தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” என கூறினார்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பங்களாதேஷில் சமீபத்திய நாட்களில் அதிகரித்து வருகின்றன, அங்கு, இதுவரை 28,511 பாதிப்புகள் மற்றும் 408 இறப்புகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.