இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்…!!!

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் இரண்டு வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இந்தநிலையில், இரண்டு கிரிக்கெட் சபைகளும் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் வாசிம் கான் கூறுகையில் ”இங்கிலாந்து சென்ற பிறகு எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்பின் போதுமான அளவுக்கு பயிற்சி பெற நேரம் உள்ளது. இதனால் போட்டி நடைபெறும் நாட்களுக்குள் வீரர்கள் தயாராகிவிடுவார்கள்.

கொஞ்சம் சவாலானது என்பதால் 25 பேர் கொண்ட அணியை அழைத்துச் செல்ல இருக்கிறோம். அவர்களை ஒன்றிணைத்து போட்டிக்கு தயார்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான பணிகளை ஆரம்பித்து விடுவோம்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ள அனைத்து கருத்துக்களும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வீரர்கள் சற்று யோசிக்கிறார்கள். இந்த தொடரை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என கூறினார்.

எனினும், பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி பெறும் மைதானம் அறிவிக்கப்படவில்லை. இந்த மைதானத்தை தவிர்த்து, 3 போட்டிகள் கொண்ட ரி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான 2 மைதானங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்படும்.