இன்றைய காலநிலை விபரம்…!!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.