கொரோனாவுக்கு எதிராக சிறந்த முறையில் போராடுகிறது இலங்கை – மோடி…!!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது என தெரிவித்துள்ளார்.

இலங்கை தமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் ருவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.