மீண்டும் பயிற்சியை தொடங்கும் இலங்கை கிரிக்கெட் அணி…!!!

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 15 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பிக்கபடவிருந்தநிலையில், தற்போது ஜூன் முதலாம் திகதி பயிற்சிகளை மேற் கொள்ளவுள்ளதாக, அணியின் பயிற்சியாளர் மிக்கிஆர்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் சபை அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், அணித்தலைவர் மற்றும் என்னுடைய துணை குழுக்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.

முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், ஒருமுறை பந்து வீசிய பின்னர், மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்” என கூறினார்.

குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் முதலில் பங்கெடுக்கும் வீரர்களாக லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, சுரங்க லக்மால், கசுன் ராஜித, நுவான் பிரதீப், இசுரு உதான, தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.