இயக்குனராக உரு எடுக்கும் பிரபல நடிகை….

தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அடிப்படையில் அவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால், நடிப்பு தவிர திரைப்படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். தற்போது அவர் இயக்கியுள்ள குறும்படம், தி ஸ்லீப்வாக்கர்ஸ். இதில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவய்யா நடித்துள்ளனர்.

தூக்கத்தில் நடக்கும் பிரச்னையை பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக பல்வேறு திரைப்பட விழாக்கள் இணையதளங்களின் வழியாக நடத்தப்படுகின்றன. அதுபோல், சிறந்த குறும்படங்களுக்காக நடைபெற்ற ஒரு விழாவில், சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை தி ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், ‘விழா நடுவர்களுக்கு நன்றி. சிறந்த நள்ளிரவு குறும்படம் என்ற விருதை பெற்றதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. தொடர்ந்து நான் குறும்படம் இயக்கவும், அதன்மூலம் சினிமா படம் இயக்கவும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தேர்வு அமைந்துள்ளது’ என்றார்.