பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலத்தை நீடிப்பது தொடர்பில் கலந்துரையாடல் !

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலத்தை நீடிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

அத்துடன் பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல பகுதியில் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்று கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இதற்கு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணும் பணிகளின் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அத்துடன் தேர்தல் ஒத்திகை நடவடிக்கை நாளைய தினம் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் கண்டி, குருநாகல் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு, நேற்றைய தினமும் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை சிதைவுப்படுத்தும் நோக்கில் பல சுயட்சை குழுக்கள் எதிர்வரும் பொது தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் பலமான ஒரு கூட்டணி நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் நேற்று குறிப்பிட்டார்.

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சட்டம் தமது கடமைகளை செய்யும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .