சமநிலையில் லா லிகா: செவில்லா- வல்லாடோலிட் அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவு!

லா லிகா கால்பந்து தொடரின் செவில்லா மற்றும் வல்லாடோலிட் அணிகளுக்கிடையிலான போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

ரமோன் சான்செஸ் பிஸ்ஜுவான் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், வல்லாடோலிட் அணியின் வீரரான கிகோ, போட்டியின் 25ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

இதனைத் தொடர்ந்து, செவில்லா அணியின் வீரரான லூகாஸ் ஓகாம்போஸ் 83ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி, இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை செவில்லா அணி 54 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. வல்லாடோலிட் அணி 35 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தில் உள்ளது