இங்கிலாந்தில் பாடசாலைகளை மீட்டெடுக்கும் திட்டம் ஆரம்பம்…!!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சரிவுக்கு பிறகு, இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளுக்கான 10 ஆண்டு புனரமைப்பு திட்டத்திற்கான சட்டதிட்டங்களை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வகுக்கவுள்ளார்.

இது பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தேர்தல் வாக்குறுதி. ஆனால் இதனை செயற்படுத்துவதற்கு கொரோனா வைரஸ் முக்கிய தடையாக அமைந்திருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், புனரமைப்பு திட்டத்திற்கான திட்டங்களை இன்று (திங்கட்கிழமை) பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வகுக்கவுள்ளார்.

2009ஆம் ஆண்டில் நிதி நெருக்கடிக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான செலவுக் குறைப்புகளின் கீழ் இங்கிலாந்து பாடசாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளை கட்டியெழுப்புவதே முதல் படியாக இருக்கும்.

புதிய செலவினங்களில் பெரும்பகுதி வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் பாரம்பரியமாக தொழிற்கட்சியை ஆதரித்த பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும். பாரம்பரியமாக தொழிற்கட்சிக்கு வாக்களிக்கும் பல இடங்களில் டிசம்பர் மாதத்தில் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது.

மறுகட்டமைப்பு திட்டம் 2020-2021ஆம் ஆண்டில் முதல் 50 திட்டங்களுடன் ஆரம்பிக்கும். மேலும் ஒரு பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் (1.23 பில்லியன் டொலர்) நிதியுதவி அளிக்கும் என்று அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் முக்கால்வாசி, முறையே இந்த ஆண்டு பாடசாலைகள் மற்றும் மேலதிக கல்வியியல் கல்லூரிகளின் பழுது மற்றும் மேம்பாடுகளுக்குச் செல்லும்.

இதுகுறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறுகையில், ‘நாங்கள் தொற்றுநோயிலிருந்து திரும்பிச் செல்லும்போது, அனைவருக்கும் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரு நாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பது முக்கியம்.

இந்த பெரிய புதிய முதலீடு எங்கள் பாடசாலைகளும் கல்லூரிகளும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்யும், சிறந்த வசதிகள் மற்றும் புதிய கட்டடங்களுடன் ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும்’ என கூறினார்.