ரஷ்ய அணு உலையில் கசிவால் பாதிக்கப்படும் வட ஐரோப்பா

ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளால் வடக்கு ஐரோப்பா பகுதிகளில்  அணுக் கதிரியக்கத் தன்மையின் அளவு திடீரென்று அதிகரித்திருப்பதாக வட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நார்டிக் கூட்டமைப்பைச் சேர்ந்த அணு பாதுகாப்பு அமைப்புகள், வடக்கு ஐரோப்பிய வளிமண்டலத்தில் வழக்கத்தைவிடவும் அதிகமான கதிரியக்கம் பரவியிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இது குறித்து ஆய்வு நடத்திய சுகாதார அமைப்பு, ‘மேற்கு ரஷ்யாவில் உள்ள அணு உலைகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளே இதற்குக் காரணம். அங்கிருந்து பரவும் கதிர் வீச்சு தற்போது வட ஐரோப்பா வளிமண்டலம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவின் அணுமின் நிலையங்களை இயக்கும் அமைப்பானது கூறுகையில், ‘ரஷ்யாவின் வடமேற்கில் அமைந்துள்ள இரண்டு அணுமின் உற்பத்தி நிலையங்களிலும் இதுவரை எந்த பிரச்னைகளும் பதிவாகவில்லை. வழக்கம் போலவே இயங்கி வருகிறது. கதிர்வீச்சுத் தன்மையையும் கவனித்து வருகிறோம். வழக்கத்துக்கு மாறாக எந்தவித அளவீடுகளும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை’ என்று ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.