புதிய அவதாரம் எடுக்கும் தமன்னா …..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

தற்போது கைவசம் 2 படங்கள் வைத்திருக்கும் தமன்னா விரைவில் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார் என செய்தி பரவி வருகிறது. தெலுங்கு மீடியாக்களில் இது பற்றிய செய்தி தொடர்ந்து பரவி வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆஹா என்ற ஒரு ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவினை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் மற்றும் தமன்னா ஆகியோர் தான் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்காக தமன்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் ஷூட்டிங்கில் தமன்னா சமீபத்தில் கலந்து கொண்டார் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது. இந்த நிகழ்ச்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசருடன் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னா தற்போது சினிமா துறையில் அதிகம் அதிகம் உள்ள வாரிசு கலாச்சாரம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். சினிமா துறை மட்டுமின்றி மற்ற பல துறைகளிலும் இதுபோன்ற வாரிசு கலாச்சாரம் மற்றும் அரசியல் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் மும்பையில் இருந்து வந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினேன். எனக்கு மொழியும் தெரியாது. இந்த சினிமா துறைகளில் யாரையும் எனக்கு தெரியாது. நான் கடினமாக உழைத்து கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். என்னிடம் இருக்கும் திறமையை அவர்கள் ஏற்றுக் கொண்டதால்தான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. என் பயணத்தில் கிடைத்த வெற்றி தோல்விகள் அனைத்தும் என்னுடைய உழைப்பு மற்றும் விதியை பொறுத்ததுதான்” என குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு கலாச்சாரம் பற்றி பேசி அவர் “என் குடும்பத்தில் அதிக டாக்டர்கள் இருக்கிறார்கள். அந்தத் துறையில் நான் நுழைய விரும்பி இருந்தால் எனக்கு அவர்கள் வழி காட்டி இருப்பார்கள். என் சகோதரர் விரும்பியதால் மருத்துவத் துறையில் இருக்கிறார். அதே போல நாளை என்னுடைய குழந்தை சினிமாவில் நடிகராக விரும்பினால் நானும் அதையே தான் செய்வேன். அதனால் இதில் எந்த தவறும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் போன்ற பல நடிகர்கள் பின்னணி எதுவும் இன்றி பெரிய அளவில் ஜெயித்து இருப்பதையும் குறிப்பிட்டு தமன்னா பேசியுள்ளார். நடிகர்களின் வாரிசுகள் என்றால் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம் ஆனால் அவர்களின் வெற்றி அல்லது தோல்வி அதனால் மட்டுமே தீர்மானிக்க படுவதில்லை என கூறியுள்ளார் தமன்னா.