யானைகளின் மர்ம மரணம்

கடந்த இரண்டு மாதங்களில் போட்ஸ்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிந்துள்ளன.

தெற்கு ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் இதுவரை 350இற்க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், வன விலங்கு ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில்தான் இந்த மர்ம மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக 70 சதவீதமான யானைகள் நீர்நிலைகளுக்கருகே உயிரிழந்து கிடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முதன்முறையாக மே மாதத்தில் குறைந்த கால இடைவெளிக்குள் 169 யானைகள் அசாதாரண முறையில் உயிரிழந்துள்ளன. இந்த நிகழ்வு ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே, ஜூன் மாத மையத்திற்குள் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. இதுவரை 350இற்க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன.

உயிரிழப்புகளுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மனிதர்களால் விஷம் மற்றும் ஆந்த்ராக்ஸ் ஆகிய இரண்டு சாத்தியக்கூறுகள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது.

இதனிடையே இன்னமும் இரண்டு வாரங்களில் இதற்கான ஆய்வு முடிவுகள் வெளிவருமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபிரிக்காவின் குறைந்து வரும் யானைகளின் மூன்றில் ஒரு பங்கை போட்ஸ்வானா கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.