யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

50

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க யாழ்ப்பாண விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று
முன்தினம் செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்குள் இந்த உடன்படிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய தூதுவர் இதன்போது புதிய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணதுங்கவிற்கும். விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வசதி வலய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரி.வி.சானக்க ஆகியோருக்கு நல் வாழத்துக்களை குறிப்பிட்டார்.

அத்தோடு இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டமூலத்துக்கான நடவடிக்கை தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இரு தரப்பினருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.