கொவிட்-19 அதிக ஆபத்து பட்டியலில் ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள் சேர்ப்பு…!!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் அதிக ஆபத்து பட்டியலில், ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்து, ஒரிரு நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிக்கையிட்ட வடக்கு ஸ்பெயினில் உள்ள அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்கள், இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை காலத்தில் ஸ்பெயின் போன்ற புதிய தொற்றுகளின் எழுச்சியை கண்டுள்ள இடங்களிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகள், இரண்டாவது அலையினை பரப்பக்கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனிடையே, அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து திரும்பி வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனைகளை கட்டாயமாக்குவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் பிராந்தியங்களில் வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன. ஆனால் பெரும்பாலான பிராந்தியங்களில் நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜேர்மனியின் ரோபர்ட் கோச் நிறுவனம் நாடு முழுவதும் சமீபத்திய தொற்றுகள் அதிகரிப்பதற்கு அலட்சியமே காரணம் என கூறுகின்றது.