சிறுதொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் மறுக்க கூடாது – நிர்மலா சீதாராமன்…!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அவசரகால கடனை வழங்க வங்கிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசிடம் முறைப்பாட்டினை தெரிவிக்கலாம் என்றும் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடா்பாக ஆலோசனை நடத்திய அமைச்சர், பொது முடக்க காலத்தில் சுற்றுலா உள்ளிட்ட துறைகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை மத்திய நிதியமைச்சு கருத்தில் கொண்டுள்ளது என கூறினார்.

மேலும் அத்துறைகள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் நிதியமைச்சகம் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டமை காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.

பெரு நிறுவனங்கள் மூடப்பட்டதால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்தன. அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது.

தற்போது பொது முடக்கத்துக்குப் படிப்படியாக தளா்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.