ஜோகோவிச்- நடால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட வாய்ப்பு!

ஆண்கள் டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச், ரபேல் நடால் உள்ளிட்ட வீரர்கள், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் இன்னமும் உள்ள நிலையில், இத்தொடரில் விளையாடுவதிலிருந்து வீரர், வீராங்கனைகள் பின்வாங்கி வருகின்றனர்.

ஆகவே, முன்னணி டென்னிஸ் வீரர்களும் இத்தொடரிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது நோவக் ஜோகோவிச், ரபேல் நடால் டொமினிக் தீய்ம், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிட்சிபாஸ், டேனில் மெட்விடேவ் ஆகியோர், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, இவர்கள் அனைவரும் எதிர்வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.