நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் சமஷ்டியை கூட்டமைப்பு தூக்கியெறிய வேண்டும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு …!!!

நாட்டினை இரண்டாக பிளவுபடுத்தும் சமஷ்டி முறையிலான தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் செலுத்தியுள்ளார்

காவத்தை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கூட்டமைப்பின் தலைவர் முதலில் சமஷ்டியை தூக்கிவீசிவிட்டு பொதுவான தீர்வினையே கேட்க வேண்டும்என்றும் அவர் கூறினார்.

30 ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச்சென்றாலும் துரதிஷ்டவசமாக 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினால் அனைத்து திட்டங்களும் தடைப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தகவல் தெரிவித்தார்.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வலுவான நாடாளுமன்றத்தினை நிறுவ வேண்டும் என்றும் அதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் ஒளிமயமான எதிர்காலத்தினை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.