ஆறாவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது செவில்லா ஐரோப்பா அணி!

39

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படும் ஐரோப்பா லீக் கால்பந்து தொடரில், செவில்லா அணி, சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இது செவில்லா அணியின் ஆறாவது சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னதாக 2006, 2007, 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் அந்த அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், செவில்லா அணியும், இன்டர் மிலான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 5ஆவது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியின் நட்சத்திர வீரர் ரொமேலு லூக்காக்குவுக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய லூக்காக்கு அதனை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து, போட்டியின் 12ஆவது நிமிடத்தில், செவில்லா அணியின் லுக் டி ஜோங் அணிக்காக முதலாவது கோலை அடித்தார். இதன்பிறகு போட்டியின் 33ஆவது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்தார்.

இதனையடுத்து, போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியின் டியாகோ கோடின் அணிக்காக இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இரு அணிகளும் தலா 2 கோல்களை பகிர்ந்திருந்த நிலையில், இப்போட்டியின் வெற்றியாளர் யார் என்பது மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

இந்த தருணத்தில் அனுபமிக்க நட்சத்திர வீரரான ரொமேலு லூக்காக்கு, போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ‘பைசிக்கள் கிக்’ முறையில் அடிக்கப்பட்ட கோலை தடுக்க முயன்ற போது, அது ஓன் கோலாக மாறியது.

இந்த அதிஷ்டத்துடன் போட்டியின் இறுதியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் செவில்லா அணி ஆறாவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.