கரீபியன் பிரீமியர் சென். லுசியா ஸூக்ஸ் அணி வெற்றிபெற்றது.

39

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், நேற்றைய லீக் போட்டிகளில் சென். லுசியா ஸூக்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இதில் முதலாவதாக நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில், சென். லுசியா ஸூக்ஸ் அணியும் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழைக் குறுக்கிட்டதால், சென். லுசியா ஸூக்ஸ் அணிக்கு 5 ஓவர்களுக்கு 47 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென். லுசியா ஸூக்ஸ் அணி, 4.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென். லுசியா ஸூக்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மொஹமட் நபி தெரிவுசெய்யப்பட்டார்.
……

தொடர்ந்து ட்ரினிடெட் மைதானத்தில் நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிளென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களையும், ரஸ்ஸல் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், அலி கான் 2 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீலஸ் 2 விக்கெட்டுகளையும், நரைன், பவாட் அஹமட் மற்றும் டிஜே பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சுனில் நரைன் 53 ஓட்டங்களையும், கொலின் முன்ரோ ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், பிடல் எட்வட்ஸ், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் சந்தீப் லெமைச்சேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் தெரிவுசெய்யப்பட்டார்.