தமிழக வீரருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது!

46

தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உட்பட 5 பேருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, தமிழக வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்து, ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள நம் மண்ணின் மைந்தர் மாரியப்பனுக்கு, வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு, அவரது தாய் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய மாரியப்பனின் தாய் சரோஜா, பாராலிம்பிக்கில் தங்கம் வென்று பெருமை சேர்த்த தனது மகனுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி என கூறினார்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனை, அரசு பல வழிகளில் கௌரவித்து வருவதாக, அவரது சகோதரியும், நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.