பொலிஸாரின் சித்திரவதை: முச்சக்கர வண்டி சாரதி மனிதஉரிமையில் முறைப்பாடு!

36

சிவில் உடையில் வந்த பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டார் என குற்றம் சுமத்தி, முச்சக்கர வண்டி சாரதி மீது யாழ்ப்பாண பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிமாவட்டத்திலிருந்து பேருந்தில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய நபர் ஒருவரிடம், அப்பகுதியில் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடும் நபர் ஒருவர் முச்சக்கர வண்டியில் செல்வோமா என கேட்டுள்ளார்.

அந்நபர் வேண்டாம் என கூறி அங்கிருந்து சென்றதும், முச்சக்கர வண்டி சாரதியும் அடுத்த வாடிக்கையாளரை பிடிக்கும் நோக்குடன் பிறிதொரு நபரை அணுகி கேட்டுள்ளார்.

அந்நிலையில் வேண்டாம் என கூறி சென்ற நபர் சிறிது தூரம் சென்ற நிலையில் மீண்டும் திரும்பி வந்து முச்சக்கர வண்டி சாரதியுடன் முரண்பட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்புக்கு செல்ல முயன்ற வேளை அருகிலிருந்த மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி இருவரையும் சமாதானப்படுத்த முனைந்துள்ளார். சிவில் உடையில் வந்த நபர் சமாதானப்படுத்த முனைந்த நபருடனும் முரன்பட்டுள்ளார்.

அதனால் இரு சாரதிகளும் அவ்விடத்தில் இருந்து விலகி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர். அங்கு நடமாடும் சேவையில் இருந்த பொலிசாரிடம் சம்பவம் தொடர்பில் வாய் மொழி மூலம் முறையிட்டுள்ளனர்.

அதனை அடுத்து பொலிசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இருவரையும் அழைத்து வந்த போது அங்கு இவர்களுடன் முரண்பட்ட சிவில் உடை தரித்த நபர் நின்றிருந்தார்.

அவரிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தான் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திகொண்டு, முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக முறையிட்டுள்ளார்.

அதனை அடுத்து அந் நபருடன் முரண்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் போது சிவில் உடையில் வந்திருந்த பொலிஸ் அதிகாரியும் அந்த வாகனத்தில் ஏறி பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அதன் போது தன்னுடன் முரண்பட்ட சாரதியை வாகனத்தினுள் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.

பின்னர் பொலிசார் சாரதியை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்த போதிலும் அங்கு வைத்தும் சிவில் உடை தரித்த பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த சாரதியை பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி, தன்னை பொலிசார் சித்திரவதை புரிந்து தாக்குதல் மேற்கொண்டனர் என யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜிடம் முறையிட்டுள்ளார்.