மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கருங்கடலில் இருந்து கண்டுபிடிப்பு..!!

61

துருக்கி கடற்பரப்பில் 320 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு தொடர்பாக கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கி தன் நாட்டை சுற்றியுள்ள கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயுவை கண்டெடுக்கும் பணியில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்த நிலையில், 320 பில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘துருக்கியின் வரலாற்றில் கருங்கடலில் இருந்து மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

320 பில்லியன் கனமீட்டர் (11.3 டிரில்லியன் கன அடி) அளவில் இயற்கை எரிவாயு இருப்பதை துருக்கி கப்பல் கண்டுபிடித்துள்ளது. துருக்கி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயு 2023ஆம் ஆண்டு முதல் மக்களில் நுகர்வுக்கு வரும்.

ரோமேனியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கருங்கடலின் மேற்கு பகுதியில் துருக்கியின் ஃபடா கப்பல் கடலில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது தான் இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது’ என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.