அழகோடு, ஆரோக்கியத்தையும் தரும் மருதாணி..!!

62

இந்தியத் திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது. மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.

பாத்திரங்களை பளிச்சிடவைக்கும் சோப்பு முதல், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் வரை எல்லாமுமே தற்போது ரசாயன கலவைகளாக மாறி வருகின்றன. அவைகளால் பெண்களின் கைகளுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் போக்கும் சக்தி இயற்கையான மருதாணிக்கு இருக்கிறது. கால், கைகளில் ஏற்படும் பித்த வெடிப்பு, தோலுரிதல் போன்றவைகளும் மருதாணியால் மறையும். இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட மருதாணி சுப நிகழ்ச்சிகளில் மங்கள பொருளாகவும் விளங்குகிறது.

மருதாணி அரைத்து கைகளை அழகுபடுத்திக் கொண்டு சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இன்றைய அவசர யுகத்தில் பெண்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. அதனால் மருதாணி, பெண்களின் பயன்பாட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்த வியாபாரிகள் அதிலும் ரெடிமேட் வகைகளை கொண்டு வந்துவிட்டார்கள். வைத்ததும் அது காய்ந்துவிடும் என்றாலும், அதில் இயற்கையான மருத்துவ குணம் குறைவு. கிளிட்டர் மருதாணி, நெயில் பாலீஷ் மருதாணி, ஜர்தோசி மருதாணி என்று இப்போது அதற்கு பல பெயர்கள் உண்டு. அவைகளை பயன்படுத்தி கைகளில் அழகிய உருவங்களை வடிவமைக் கிறார்கள். அதன் மூலம் குறுகிய நேரத்திலே அந்த அலங்காரத்தை செய்துமுடித்துவிட முடிகிறது. காய்வதற்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அழகு நிலையங்களில் விதவிதமான மருதாணிகளை தயார் செய்துவைத்திருக்கிறார்கள். திடீர் விருந்து, விழாக்களுக்கு செல்லும்போது அதனை விருப்பம்போல் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

ஜர்தோசி எனப்படும் பாரம்பரிய மருதாணியில் தங்கம், வெள்ளி துகள்கள் கலப்பதால் அது பளபளப்பாக காட்சியளிக்கிறது. கிளிட்டர் மருதாணியை உடைக்கு பொருத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய மருதாணியால் அழகுபடுத்திக்கொண்டு பின்பு அதற்குமேல் பளபளக்கும் ஜெல், மைக்கா போன்ற பொருட்களை கலந்து பூசி அழகிய வடிவத்தை அலங்காரம் செய்வார்கள். மருதாணியின் புதிய பரிமாணம் கவர்ச்சியாக இருப்பதால், இப்போது பலராலும் இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. இதன் பெருமை வெளிநாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.