நெடுந்தீவு யுவதியின் கொலை வழக்கு குடும்ப உறவினர்கள் கைது!

37

மன்னார் – உப்பளம் பகுதியில் கடந்த 13ம் திகதி நெடுந்தீவை சேர்ந்த யுவதி ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இரு பெண்கள் நேற்று (23) இரவு மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, குறித்த இரு பெண்களையும் எதிர் வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி உட்பட இரண்டு பெண்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டு மன்னார் பொலிஸாரின் விசாரனைகளுக்கு அமைவாக நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இருவரையும் மன்னார் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது கைது செய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, “குறித்த கொலைக்கும், இரு பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வெளி நாட்டுக்கு அனுப்பிவதற்கு என குறித்த பெண்ணின் தாய் மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு குறித்த இரு பெண்களும் சென்றனர்” என தெரிவித்திருந்தார் .

எனினும் பாதிக்கப்பட்ட யுவதி சர்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சர்மிலன் டயஸ், “குறித்த யுவதியின் கொலை திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது எனவும், கொல்லப்பட்ட பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக் கொலை இடம்பெற்றதாகவும் அவ்விரு பெண்களும் பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் எனவே இக்கொலையின் பிரதான சந்தேக நபரான அவ் பெண்ணின் தாய் மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்குவதுடன் குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும்” எனவும் மன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாத பிரதி வாதங்களின் பின்னர் பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் தாய் மாமனை   கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.