குற்றங்களை குறைப்பதற்காக சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை!

61

நீதியமைச்சர் அலி சப்ரி குற்றங்களை குறைப்பதற்காக, சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் மரண தண்டனை கடந்த 50 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது ஓரிரு நாட்களுக்குள் செய்து முடிக்கக்கூடிய காரியம் கிடையாது.

அமைச்சரவை முதலில் அங்கீகாரம் வழங்க வேண்டும். பின்னர் நாடாளுமன்றில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு சில காலம் தேவைப்படும். எவ்வாறாயினும், இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.

மக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் திட்டங்களுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். இந்த அரசாங்கத்தில் முன்னாள் அரசாங்கத்தின் குறைப்பாடுகள் இருக்காது. நாம் பொலிஸாரின் பலத்தை அதிகரிக்க வேண்டும்” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.