புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை!

75

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடு தொடர்பில் இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

சாதாரண மக்களாக இருப்பின் இழப்பீடு வழங்கலாம் என்றும் அதுபோல் காணாமல்போன இராணுவத்தினர்களுக்காகவும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காணாமல்போனதாகக் கூறப்படுவோர் இறந்திருக்கலாம் என்று எண்ணுவதாக குறிப்பிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதுவதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் அதனை உறுதியாகக் கூற முன்னர் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் குறிப்பாக காணாமல்போனோர் எனக் கூறப்படுவோறில் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் அது தொடர்பாக பரந்துபட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.