சஹ்ரான் குறித்து 347 உளவுத்துறை அறிக்கைகள்..!!!

66

2015 ஆம் ஆண்டு முதல் 347 உளவுத்துறை அறிக்கைகள் மூத்த அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் தொடர்பாகவே உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது என நேற்று இடம்பெற்ற விசாரணைகளின்போது அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகள் யாரும் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2015 முதல் சமர்ப்பிக்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக தகவல்களை எந்த மூத்த அதிகாரியும் கோரவில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் மட்டுமே அவ்வப்போது மேலும் இரண்டு அல்லது மூன்று அறிக்கைகளை கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் ஏதேனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால், தான் உடனடியாக இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தாக்குதலுக்கு முன்னர் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சிலர் தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு தாக்குதலுக்குப் பின்னர்தான் மீண்டும் அதனை திறந்தார்கள்.

அத்தோடு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.

சிலர் வீட்டில் தங்கி தூங்கினர், இன்னும் சிலர் தேவாலயத்திற்கு செல்வதைத் தவிர்த்தனர். இறுதியாக, நான் ஏன் முன் அறிவிப்பைக் கொடுக்கவில்லை என்று எல்லோரும் என்னிடம் கேட்டார்கள் .

நான் செய்ய வேண்டியதைச் செய்தேன். பாதுகாப்பு செயலாளர், அரச புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதியிடமும் கூட தெரிவிக்க முயன்றேன். ஆனால் அவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல” என நிலந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.