இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம்-ஜயநாத் கொலம்பகே..!!

62

இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், புதிய அரசின் வெளிவிவகார கொள்கை, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நலன்களை பாதுகாப்போம் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் இதே கொள்கையை பின்பற்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்கள் மண்ணில் குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான எந்த காரியத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சீனா இரண்டாவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் இந்தியா 6ஆவது பொருளாதார வல்லரசு நாடு என்றும் எனவே 2 பொருளாதார வல்லரசுகளுக்கிடையே இலங்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை முதலில் இந்தியாவுக்குத்தான் குத்தகைக்கு கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால், இந்தியா ஏற்காததால் சீனாவுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த துறைமுகத்தை சீனா வணிக காரியங்களுக்குத்தான் பயன்படுத்தும் என்பதோடு, இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாது என்றும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.