பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் நுவரெலியாவில் போராட்டம்!

54

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆசிரியர்களின் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இவர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவது என தீர்மானிக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவர்கள் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய கல்லூரிகளில் தங்களுடைய பயிற்சிகளை 2018ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்டார்கள்.

அப்படி நிறைவுசெய்து கொண்ட பலரும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுடைய நிலுவையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நுவரெலியாவில் இருக்கின்ற 600 ஆசிரிய உதவியாளர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் ஆசிரியர்களாக உள்வாங்கபடாமல் இருந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கு வெறுமனே மாதாந்தம் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகின்றது. ஏனைய மாவட்டங்களில் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்த பின்பு அவர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிலுவைத் தொகையையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்படத்தக்கது.