ஆதன வரியை குறைக்காவிடின் வெகுஜன போராட்டம் முன்னெடுக்கப்படும் – பிரதேச சபை உறுப்பினர்கள் எச்சரிக்கை…!!!

68

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படவுள்ள அதிகரித்த ஆதன வரியை மக்களின் நலன் கருதி குறைக்காவிடின், பாதிக்கப்படவுள்ள மக்களை ஒன்றுதிரட்டி வெகுஜன போராட்டம் முன்னெடுக்கப்படும் என கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருக்கிறது.

பெரும்பாலான மக்கள் மூன்று வேளை உணவு உண்ணுவதே கேள்விக்குறியது. யுத்தத்தின் பாதிப்புக்களை முற்றும் முழுதாக எதிர்கொண்டு படிப்படியாக மீண்டும் வரும் மாவட்டமாக காணப்படுகிறது.

இப்படியான ஒரு மாவட்டத்தில் புதிதாக ஆதனவரி அறவிடுகின்றபோது, எடுத்த எடுப்பிலேயே பத்து வீதம் என்கின்ற அதிகரித்த வீதத்தில் அறவிடுவது மக்களை பெரும் சுமைக்குள் தள்ளிவிடும்.

மேலும் புதிதாக ஆதனவரி அறவிடுவதற்கு மக்களின் ஆதனங்களின் மதிப்பீடுகள் தற்போதைய சந்தை பெறுமதியில் மதிப்பிடப்பட்டது.

எனவே, சொத்துக்களின் பெறுமதியும் தற்போதைய சந்தை பெறுமதியில் அதிகரித்து காணப்படும் இந்நிலையில், அதிகரித்த பெறுமதிக்கு அதிக வீதத்தில் வரி அறவிட்டால் அது மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.

இதனை அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் பார்த்தக்கொண்டிருக்க முடியாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையானது மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களுக்கு எதிரானதாக இருக்க கூடாது.

ஆனால் கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகள் மக்கள் நலன்களுக்கு அப்பால் கட்சி நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தன்னிச்சையான செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகிறது.

எனவே, கரைச்சி பிரதேச சபை இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை எனில் நாம் மக்களை திரட்டி வெகுஜன போராட்டத்தை மேற்கொள்வோம்” என அவர்கருத்து குறிப்பிட்டுள்ளார்.