கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் முன்வைத்த ஆலோசனை…!!!

72

தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலுக்கு செல்லும் முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூரல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சு நேற்று ( வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், படகொன்று புறப்படுவதற்கு முன்னர் அப்படகின் தொழில்நுட்ப நிலைமை மற்றும் அதன் இயங்கு நிலை தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறும், பின்வரும் விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பாதுகாப்பிற்காக படகுகளில் உயிர் காப்பு அங்கிகளை வைத்துக்கொள்ள வேண்டும்.
தினந்தோறும் தொழிலுக்காக செல்லவுள்ள பிரதேசம் தொடர்பில் அப்பகுதியில் அறிவிக்க வேண்டிய அதிகாரிகளுக்கு அறிவித்துவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டும்.

நீண்ட நாள் படகு உரிமையாளராக இருந்தால் கடற்றொழிலுக்காக தமது படகுகளை செலுத்துவதற்கு முன்னர் குறித்த படகில் ரேடியோ இயந்திரம் ஒன்று கட்டாயம் இருப்பது முக்கியமாகும். அத்துடன் அது பயன்படுத்தப்படவும் வேண்டும்.
அதேபோன்று ஒவ்வொரு நாளும் ரேடியோ நிலையத்தை தொடர்பு கொண்டு தாங்கள் இருக்கும் பகுதி தொடர்பில் அறிவிக்குமாறும் அவ்வாறு அறிவிப்பதன் மூலம் திடீர் அனர்த்தங்களின் போது படகு மற்றும் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அது மிகவும் சாதகமாக அமையும் எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தினமும் ஒரு தடவை ரேடியோவை பயன்படுத்துவது கட்டாயம் எனவும் அவ்வாறு பயன்படுத்தப்படாத நீண்ட நாள் படகுகளுக்கு மீண்டும் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கும் போது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது மீனவர்களது அடுத்த பயணங்களுக்கான அனுமதியை பெற்றுக் கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும் .

ஆகவே அன்பான மீனவர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்பட்டு தமது உயிர் மற்றும் படகுகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.