போதைக்கு அடிமையான மகன் தந்தை மீது தாக்குதல்!

70

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பகுதியில் போதைக்கு அடிமையான மகன் ஒருவர் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

போதைக்கு அடிமையான 22 வயதுடைய மகன் ஒருவர் தனக்கு போதைப்பொருள் வாங்க பணம் தருமாறு கோரிய நிலையில், தந்தை மறுப்புத் தெரிவிக்கவே அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்த வகையில் போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான எம்.பி.எம்.தாஹா, ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல ஆகியோர் குறித்த மகனைக்கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து சிறிய போதைப்பொருள் பக்கட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.