இஸ்ரோ பெங்களூரில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்கவுள்ளது..!!

81

பெங்களூரில் செயற்கை நிலவு பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை பரிசோதிக்கும் வகையில் இவ்வாறு உருவாக்கம் இடம்பெறவுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அடுத்த ஆண்டு (2021) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. இதற்கான பணிகள் நடந்துவருவதுடன் விண்ணில் ஏவுவதற்கு முன்பாக விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவியை சோதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 லேண்டருக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கியபங்கு வகிக்கின்றன. செயற்கைப் பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும்.

இதில், லேண்டரின் சென்சார்கள் செயற்றிறன் குறித்து முக்கியமாக சோதனை செய்யப்படும் என்பதுடன் செயற்கை நிலவுத் தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கிலோ மீற்றர் உயரத்தில் இருந்து சென்சார்களுடன் தரை இறங்கும்.

இதன்படி, பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவுதல் நிலையத்தில் லேண்டரை முழு அளவில் சோதிப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.