புதிய அரசியல் அமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்.

61

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்தார்.

19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 20ம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூல வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை பொதுஜன வாக்கெடுப்பின்றி, நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த வரைவிற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதனை வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், நிபுணர் குழுவில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், அமைக்கப்பட்டுள்ள 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும் கலாச்சார பண்பாடுகளையும் கருத்திலெடுத்து நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்த அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.