விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன்.

64

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரக்காந்தனிடம் இன்று வாக்குமூலம் பெறவுள்ளது.

இதற்காக அவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 திகதி கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், 4 ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் விசேட அனுமதியுடன் அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமவீரவும் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவில், நாளைய தினம் முன்னிலையாகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போன்றோரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.