கரீபியன் பீரிமியர் லீக்: பார்படோஸ் அணியை வீழ்த்தி கயானா அணி எளிதில் வெற்றி…!!!

74

கரீபியன் பீரிமியர் லீக் ரி-20 தொடரின் 26ஆவது லீக் போட்டியில், கயானா அமோசன் வோரியஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ட்ரினிடெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமோசன் வோரியஸ் அணியும், பார்படோ ட்ரைடன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமோசன் வோரியஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பார்படோ ட்ரைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, நெய்ம் யங் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 18 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், ரொமாரியோ செப்பர்ட் மற்றும் தாஹீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் கிறீன் மற்றும் கெவீன் சின்கிளாயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 90 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமோசன் வோரியஸ் அணி, 14.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும், சந்தர்போல் எம்ராஜ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரெய்மன் ரெய்பர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரொமாரியோ செப்பர்ட் தெரிவு செய்யப்பட்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது.