நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

80

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட்- பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கெசல்கமுவ ஓயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றவர், குறித்த சடலத்தை கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர் அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, அவர்கள் அவ்விடயத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்பஸ்த்தர் காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்திலுள்ள உபமின் நிலையத்திற்கு தொழிலுக்காக சென்றதாகவும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவை சேர்ந்த 42வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார், மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.