அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத்தீயில் சிக்கிய 200 பேர் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு…!!!

64

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சிக்கிய 200 பேர் உலங்கு வானூர்தி மூலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுலாவுக்காக சென்றிருந்த நபர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் 20 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதை அடுத்து, தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனாலும், தொடர்ந்து தீ பரவியதால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது.

இந்த காட்டுத் தீ-க்கு Apple fire என பெயரிட்ட அதிகாரிகள், வனப்பகுதியை ஒட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ, 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவியது.

இதையடுத்து, சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி, தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை தூவும் பணி நடைபெற்று வருகிறது.

இரசாயனப் பொடியை தூவும் பணியில் ஏராளமான சிறிய ரக விமானங்களும், உலங்கு வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.