இந்திய சீன எல்லை பிரச்சனை மிகவும் தீவிரம்..!!

49

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்த நிலையில் உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இரண்டு நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், 20 இந்திய படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக இரு நாடுகளின் பாதுகாப்பு தரப்பினர்களும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எல்லைப்பிரச்சனை மிகவும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதலே எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான நிலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் மட்டத்திலான மிக மிக ஆழமான பேச்சுவார்த்தை அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொள்வதற்காக நேற்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், அவர் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து, எல்லை பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.