“கொவிட்-19 நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது”-உண்மையை கூறிய ட்ரம்ப்..!!

42

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் அபாயத்தை குறைத்துக் கூறியதை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவையே உலுக்கிய ‘வாட்டர்கேட்’ ஊழலை வெளிக் கொண்டு வந்த 77 வயதான ஊடகவியலாளர் பாப் வுட்வர்ட் எழுதிய ‘ரேஜ்’ என்ற புத்தகத்தில், கொவிட்-19 நோய்த்தொற்று அபாயம் குறித்து தான் குறைத்துக் கூறியதாக ட்ரம்ப் அளித்த செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அளித்த செவ்வியில், ‘கொவிட்-19 நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது. அதிக உயிர்களை பலி வாங்கக் கூடியது. ஃபுளூ காய்ச்சலைவிட அந்த நோய் மிகவும் அபாயகரமானது. கைகளால் தொட்டால் மட்டுமின்றி, காற்றின் மூலமும் அந்த தீநுண்மி பரவும். பொருட்களைத் தொடாமல் தவிர்க்கலாம்.

ஆனால், மூச்சுவிடாமல் இருக்க முடியாது என்பதால் கொவிட்-19 மிகவும் ஆபத்தானது. இருந்தாலும், அதுகுறித்து பொதுமக்களிடம் முழுமையாகத் தெரிவிக்கவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வர இதுகுறித்து ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில்,
‘கொவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தில் நான் அமெரிக்க மக்களிடம் பொய் சொன்னதாகக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். உண்மையில் அமெரிக்காவின் நலனுக்காக பாடுபடுபவன் நான். இந்த நாட்டை மிகவும் நேசிக்கும் நான், நாட்டு மக்களை அச்சத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.

நாட்டில் பீதியை உருவாக்கவும் நான் விரும்பவில்லை. அமெரிக்காவையும், உலகையும் அச்சுறுத்த நான் விரும்பாததால்தான் அந்த நோய் குறித்த முழு உண்மைகளையும் வெளிப்படையாகக் கூறாமல் இருந்தேன்.

கொவிட்-19 நோய்த்தொற்று பரவலுக்கு இடையே நாட்டு மக்களிடையே தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்ட எனது தலைமையிலான அரசு விரும்பியது. அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்தேன். ஆகாயத்தும், பூமிக்கும் குதித்து, நாம் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம் என்று கூச்சலிட்டு, அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

கொவிட்-19 அபாயம் குறித்து நாங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த நோயை எதிர்த்துப் போரிடுவதற்குரிய முகக் கவசங்கள், மருத்துவ உபகரணங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியதை அனைவரும் கவனித்தில் கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.